கொல்லிமலை ரகசியங்கள் /Kollimalai ragasiyam
கொல்லிமலைச் சாரல் கொல்லிமலையின் இயற்கை அழகு
நகரவாழ் சூழலுக்கு மாறுபட்ட ஒரு அனுபவம், ஒரு புத்துணர்ச்சி வேண்டும் என்பவர்கள் கொல்லிமலைக்கு செல்வது அல்லது கொல்லிமலை சாரலில் அமைந்துள்ள பல கிலோமீட்டர் தொலைவுகொண்ட சாலையில் பயணிப்பதே மனதிற்கு ஒரு இன்மை தரும் நிகழ்வாகும்.
மகேந்திரா நிறுவனர் திருவாளர் அவர்கள் இப்பாதையை பற்றி வியந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சிறப்பு செய்துள்ளார்.
தமிழகத்திலேயே அதிக 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் பயணிப்பதே மனதிற்கு ஒர் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
கொல்லிமலையின் கிழக்கே ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ள மெட்டாலா கணவாய் முதல் முள்ளுக்குறிச்சி பெரம்பன் சோலை, பெரியகோம்பை, தம்மம்பட்டி வரை கொல்லிமலையின் சாரலில் இயற்கையை ரசித்தபடியே சமவெளி சாலையில் செல்லலாம்.
கொல்லிமலையின் மேற்கே சேந்தமங்கலம் முதல் காரவள்ளி வரை சமவெளி பகுதியில் கொல்லிமலை சாரலின் தாக்கம் மிகச் சிறப்பாக இருக்கும்.
மிக சிறப்பான ஒரு சாலைப்பயணம்
அதிகாலையில் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து மெயின் சாலை செல்கிறது. ஆனால் சேந்தமங்கலம் காரவள்ளி வழியாக சோழக்காடு, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, அரப்பள்ளீசுவரர் கோவில் செல்வதே சிறப்பான ஒரு பயண சாலை வழியாகும்.
கொல்லிமலை – பெயர்க்காரணம்
மூன்று வகையான காரணங்கள் கூறப்படுகிறது.
- கொல்லிமலையின் காவல் தெய்வம் கொல்லிப்பாவையாகும். இந்த கொல்லிப்பாவையால் இம்மலை பாதுகாக்கப்படுவதால் கொல்லிமலை என்று பெயர் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. சங்க இலக்கியத்தில் கொல்லிமலையின் காவல்தெய்வமாக கொல்லிபாவை இருந்திருக்கிறது. தீயசெயல்கள் செய்வோர், தீய எண்ணம் கொண்டு வருவோரை கோபச்சிரிப்பிலேயே கொல்லும் பாவையாக இருந்தது. இதனாலேயே கொல்லிமலை என பெற்றதாக கூறப்படுகிறது.
- கொல்லிமலையில் ஒரு வகை மலர்கள் மலர்ந்து மிகுந்த நறுமணத்தைக் கொடுக்கும். மாசிமாததில் இந்த வகை மலர்கள் அதிகம் பூத்து மணம் வீசும். இம்மணத்தினால் பலருக்கு காய்ச்சல் வரும். இக்காய்ச்சல் வந்தவர்கள் கை, கால், காது, மூக்கு வீங்கி இறந்து விடுவர். மலர்கள் மலர்ந்து மணம் பரப்பிக் கொல்லுகிற தன்மை உடையதால் கொல்லிமலை எனப் பெயர் பெற்றதாக, இந்த மலைவாழ் மக்கள் செவிவழிச் செய்தியாக மரபு வழியாக கூறுகின்றனர்.
- கொல்லிமலையில் மூலிகைகள் நிரம்பிக் கிடைக்கின்றன. பலவகை மூலிகைகள் பலவிதமான உயிர்க்கொல்லி நோய்களை அழிக்கும் ஆற்றல் உடையது. இவற்றில் “ஆற்றல்மிக்க மூலிகைகள் உயிர்கொல்லி நோய்களை அழிப்பதால் கொல்லிமலை” என பெயர்பெற்றதாக கூறுகின்றனர்.
கொல்லிமலை நிலவியல் அமைப்பு
தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையின் வரிசையில் கொல்லிமலை, பச்சமலை, போதமலை போன்ற மலைகளின் வரிசையில் இடம் பெற்றுள்ளன. கொங்கு நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இயற்கை எல்லையாக இக்கொல்லிமலை அமைந்துள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையும் சிறப்பும் உடைய கொல்லிமலை தமிழ் நாட்டின் மத்தியப்பகுதியில், நாமக்கல் மாவட்டதில் அமைந்துள்ளது. மேலும் 2012 ஆம் ஆண்டு நாமக்கல் மாட்டத்தில் புதிய தாலுக்காவாக கொல்லிமலை உதயமானது.
கொல்லிமலை நாமக்கல்லில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இம்மலை வடதிசையில் நாமகிரிபேட்டை மெட்டாலா வரையிலும், தென்திசையில் எருமப்பட்டி வரையிலும், மேற்கு திசையில் பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் வரையிலும் கிழக்கு திசையில் முள்ளுக்குறிச்சி தம்மம்பட்டி துறையூர் வரையிலும் பரவி ஓங்கி வளர்ந்து நிற்கிறது.
280 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள கொல்லிமலையின், கிழக்கு மேற்காக 19 கிலோமீட்டர் தொலைவும், வடக்கு தெற்காக 18கிலோமீட்டர் தொலைவும் உடையது.
கடல் மட்டத்தில் இருந்து 1000 முதல் 1500 மீட்டர் உயரமுடையது. மலையின் உயர்ந்த இடமான குழிவளைவு என்ற இடம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4368அடி உயரம் உடையது.
கொல்லிமலையில் உள்ள நாடுகள், ஊர்கள்
ஐம்பது வீடுகள் சேர்ந்த இடம் ஊர் என்றும், பல ஊர்கள் சேர்ந்து நாடு என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாடும் ஒரு பஞ்சாயத்து ஆகும்.
கொல்லிமலையில் 14 நாடுகளும் 273 சிற்றூர்களும் இருக்கின்றன.
கொல்லிமலையில் உள்ள நாடுகள்
- குண்டனி நாடு
- ஆலத்தூர் நாடு
- குண்டூர் நாடு
- திருப்புள்ளி நாடு
- எடப்புளி நாடு
- பெரக்கரை நாடு
- பைல் நாடு
- சித்தூர் நாடு
- வளப்பூர் நாடு
- அரியூர் நாடு
- வாழவந்தி நாடு
- தின்னனூர் நாடு
- சேலூர் நாடு
- தேவானூர் நாடு
இப்பதினான்கு நாடுகளும் அக்காலம் முதல் இக்காலம் வரை பெயர் மாறாமல் அதே பெயரில் அழைக்கப்படுகின்றன.
கொல்லிமலையின் மூலிகை வளம்
கொல்லிமலை மூலிகைகள்
சித்தர்கள் கூற்றுப்படி 1008 மூலிகைகள் இருக்கின்றன என்று இன்றைய சித்த வைத்தியர்கள் கூறுகின்றனர். இவற்றில் கொல்லிமலையில் மட்டும் 108 மூலிகைகள் இருப்பதாக கூறுகின்றனர்.
தமிழகத்திலேயே கொல்லிமலையில்தான் அதிக மூலிகைகள் கிடைகின்றன என்றும் ஒப்புக்கொள்கின்றனர்.
1008 மூலிகைகள் இருப்பினும் சித்தவைத்திய அட்டவணையில் உள்ள 108 காயகல்ப மூலிகைகளில் இதுவரை 36 மட்டுமே தாவரவியல் படி தெரிந்துள்ளதாகவும் அவற்றில் 28 மூலிகைகள் கொல்லிமலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கொல்லிமலை மரங்கள்
கொல்லிமலையின் காரவள்ளி சாலை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து மூங்கில் சோலைகளின் நடுவே சாலை செல்கிறது.
கொல்லிமலையில் குமிழமரங்கள் அதிகம் உள்ளன. கொல்லிமலை பலாப்பழங்கள் கொல்லிமலையை சுற்றி உள்ள பகுதிகளுக்கும், மற்ற மாவட்டத்திற்கும் மக்கள் விரும்பும் பலாப்பழமாக செல்கிறது.
கொய்யா மரங்களும் இங்கு அதிகம் உள்ளது.
தற்கால கொல்லிமலையின் நறுமண பொருட்கள்
மிளகு, காபி, ஏலம், திப்பிலி போன்ற மசாலா நறுமண பயிர்கள் கொல்லிமலையில் விளைவிக்கப்படுகின்றன. இவை கொல்லிமலை மற்றும் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பேளுக்குறிச்சி சந்தையில் விற்கப்படுகிறது. வெளி சந்தைக்கும் அனுப்பப்படுகிறது.
கொல்லிமலை கனிவகைகள்
குறிஞ்சி நில கொல்லிமலையில் கனி வகைகளில் மா, பலா, வாழை போன்ற முக்கனிகளும் கொய்யா, அன்னாசி பழவகைகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. மேலும் கருவாழை, ஆரஞ்சு, நாரத்தை, மாதுளை பழவகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தற்போது குச்சி கிழங்கு எனப்படும் மரவள்ளி கிழங்கும் வளர்க்கப்படுகிறது.
கொல்லிமலைத் தேன்
சீரகம், கடுகு, வெந்தயம், பூண்டு,நெல், கோதுமை, மக்காசோளம், கேழ்வரகு, சாமை, தினை, சோளம், பனிவரகு, தட்டைபயிறு, உளுந்து, பச்சை பயிறு, மொச்சை, வரகு, கடுக்காய், சாதிக்காய் போன்ற உணவுப் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.
முக்கனியோடு கொல்லிமலை தேன் மிகவும் சிறப்புப் பெற்றது. கொல்லிமலை மூலிகை செடிகள், மலர்கள் மூலம் கிடைக்கின்ற தேன் உண்மையிலேயே ஒரு இயற்கையான மூலிகை உணவு மருந்தாகும்.
கொல்லிமலை உணவுப் பொருட்கள்
கொல்லிமலையில் பிற உயிரினங்கள்
இம்மலையில் அன்றைய சூழ்நிலையில் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, முள்ளம்பன்றி, நரி, குரங்கு, மான், உடும்பு போன்ற உயிரினங்கள் இருந்தன. ஆனால் இன்றைய சூழலில் குரங்கு, உடும்பு, பன்றி, கரடி, நரி மட்டுமே இருக்கின்றன.
மயில், பருந்து போன்ற பறவையும் இன்று குறைந்த அளவே உள்ளன.
கொல்லிமலையின் மந்திர தந்திரங்கள்
கொல்லிமலை என்றாலே மந்திர தந்திரங்களுக்கு உரிய இடம் என்பார்கள். சித்தர்கள் வாழ்ந்த பூமி என்பதால் சித்து வேலைகளைக் கற்று தேர்ந்தவர்கள் கொல்லிமலை சித்தர்கள் போல் பலர் வாழ்ந்து வருகின்றனர்.
வசியம், மாந்தரீகம், செய்வினை என்ற பெயரில் கட்டுக்கார பூசாரிகள் கொல்லிமலையின் பலப்பகுதிகளில் இச்செயல்கலை செய்கின்றனர்.
கொல்லிமலையின் வேறு பெயர்கள்
சங்ககாலமுதல் தற்காலம் வரை கொல்லிமலை என்ற பெயர் இருக்கிறது.
சங்கம் மருவியகாலத்தில் ருசியமுக பர்வதம் என அழைக்கப்பட்டு இருக்கிறது.
கிபி ஏழாம் நூற்றாண்டில் கொல்லிமலையினை பல்லவர்கள் ஆட்சி பிரிந்துள்ளனர். அவர்கள் மழ நாடு என அழைத்துள்ளனர்.
கிபி எட்டாம் நூற்றாண்டில் பாண்டியர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்கள் மழகொங்கம் என அழைத்திருக்கின்றனர்.
மேலும் கிபி 11 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இக்காலத்தில் புலவர்கள் இதை சதுரகிரி என அழைத்துள்ளனர்.(தற்போது சதுரகிரி மலை என்பது வேறு)
மூலிகைகளின் ராணியான கொல்லிமலையை மூலிகை மலை என்றும் அழைக்கப்படுகிறது.
இம்மலைக்கு ருசியமுகபருவதம், மழநாடு, மழகொங்கம், சதுரகிரி, கோலேச்வரம், குடவரை, மூலிகை மலை என காலத்திற்கு ஏற்ப அழைத்தாலும் கொல்லிமலை என்றே வழக்கில் இருந்து வருகிறது.
கொல்லிமலை வரலாற்றுப் பெருமைகள்
கொங்கு நாட்டின் கிடக்கு எல்லையான வளம் மிக்க கொல்லிமலையினை மூவேந்தர்களும் ஆண்டு வந்துள்ளனர்.
பல்லவர்கள், பாண்டியர், சோழர்கள், சேரர், நாயக்கர்கள், ஐரோப்பியர்கள் என பல்வேறு காலங்களில் கொல்லிமலையை ஆட்சி புரிந்து வந்துள்ளனர்.
தற்காலத்தில் 1961-62 ஆம் ஆண்டில் சுமார் 29 லட்சம் செலவில் அதிகமாக 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைச்சாலை அமைக்கப்பட்டது.
கொல்லிமலையின் வீரத்தினை மெய்பித்த வல்வில் ஓரியின் உருவச்சிலையினை 1975-இல் செம்மேட்டில் நிறுவப்பட்டது.
தற்காலம், நாயக்கர் காலம், சோழர் காலம், பக்தி காலம், சங்கம் மருவிய காலம், சங்க காலம் என காலந்தோரும் கொல்லிமலை இலக்கிய படைப்பு பெருமைகளை பெற்றுள்ளது.
கொல்லிமலை சமயப் பெருமைகள்
கொல்லிமலையின் காவல் தெய்வங்களாக கொல்லிபாவை, மாசி பெரியசாமி, கருப்பன்னசாமி எனும் மூன்று தெய்வங்களும் கொல்லிமலைவாழ் மக்களின் இன்றளவும் பூசித்து வரும் கடவுள்களாகும்.
கொல்லிமலையின் முதன்மையான காவல்தெய்வமாக கொல்லிப்பாவையை வணங்குகின்றனர். ஆனால் கொல்லிப்பாவையின் சரியான வடிவம், தெய்வம் அமைந்த இடம் ஆகியவை புதிராகவே இருக்கின்றன. கொல்லிப்பாவை அரபளீசுவரர் கோவிலுக்கு மேற்புறம் இருந்ததாகவும், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்ததாகவும் வெவ்வேறு பலங்கால நூல்களில் காணப்படுகிறது.
ஆனால் தற்போது எட்டுக்கை காளியம்மன் தெய்வத்தையே கொல்லிப்பாவையாக பாவித்து வணங்குகின்றனர். ஆனால் கொல்லிப்பாவை மற்றும் எட்டுக்கை காளியம்மன் ஆகிய தெய்வங்கள் வேறு வேறானவை.
கொல்லிமலையின மக்கள் இயற்கையை வணங்கும் முறையை கொண்டுள்ளனர்.
குலதெய்வ வழிபாடு முக்கியமான சமய வழிபாடாக உள்ளது.
இந்து முறை வழிப்பாடே அதிகம் காணப்படுகிறது
அறப்பளீஸ்வரர் திருக்கோவில்,மாசி பெரியசாமி கோவில்,எட்டுக்கை காளியம்மன் கோவில்
கொல்லிமலையில் கொண்டாடும் விழாக்கள்
ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஆடி 18 அன்று நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவும், தமிழக அரசால் நடத்தப்பெறும் வல்வில் ஓரிவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
- சித்திரை- மாரியம்மன் கோவிலுக்கு விழா எடுத்தல்
- வைகாசி- வைகாசி விசாகத்திருவிழா-அறப்பள்ளீஸ்வரர் கோவில்
- ஆனி-
- ஆடி- பதினெட்டாம் பெருக்கு விழா- ஆடி18
- ஆவணி-
- புரட்டாசி- திருமால் வழிபாடு மாதம் முழுவதும்
- ஐப்பசி- தீபாவளித் திருவிழா
- கார்த்திகை- அறப்பள்ளீஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா
- மார்கழி- இம்மாதம் முழுவதும் பெருந்தெய்வ வழிபாடு முறையாக நடைபெறும்.
- தை- பொங்கல் விழா
- மாசி- மாசி பெரியண்ணசாமி கோவில் திருவிழா
- பங்குனி- மாரியம்மன், காளி, பிடாரி, அம்மன் கோவில்களில் திருவிழா
கொல்லிமலையின் பழங்காலச் சின்னங்கள்
கொல்லிமலையின் சிறப்புமிக்க பொருட்கள் சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளன. கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள் உள்ளன.
கொல்லிமலை முதுமக்கள் தாழிகள்
வாசலூர்பட்டியில் முதுமக்கள் தாழி ஒன்று உள்ளது. “புதை வடை” என தொல்பொருள் ஆய்வாளர்களால் குறிப்பிடும் இது 2000 ஆண்டுகள் பழமையானதாகும்.
கொல்லிமலை குகைகள்
கோரக்கர் குகைகள் என அழக்கப்படும் குகையை அப்பகுதி வாழ்மக்கள் “பித்துக் கிளவிக் குகை” என அழைக்கின்றனர். மேலும் இக்குகைகளுக்கு அருகில் எளிதில் செல்லாவண்ணம் பல குகைகள் உள்ளன.
குறிச்சி
குறிச்சி என்பது மலை சார்ந்த பகுதியாகும். கொல்லிமலையை சார்ந்த பகுதிகளான முள்ளுக்குறிச்சி, மூலக்குறிச்சி, கல்குறிச்சி, ஒடுவங்குறிச்சி, வேலுக்குறிச்சி(பேளுக்குறிச்சி) எனும் இடங்களாகும்.கோவிலின் முன்பகுதியில் கட்டப்பட்ட அழகான சிறுகோபுரமும் குரிச்சி அல்லது குறிஞ்சி என்றே அழைக்கப்படுகிறது.
கொல்லிமலை பழமையான சிலைகள்
கொல்லிமலையின் கோவில்களில் உள்ள சிலைகள் பலவும் பல்வேறு வடிமைப்புகளில், ஒவ்வொருவரின் ஆட்சியிலும் உள்ள சிறந்த சிற்பகலையின் நுட்பங்களை உடையதாக இருக்கிறது
கொல்லிமலை கல்வெட்டுகள்
கிராங்காடு, வீரகனூர், மேட்டு விளாரம், அரபள்ளீஸ்வரர் கோவில்களில் பல கல்வெட்டுகள் உள்ளன.
உத்தம சோழன், ராசராச சோழன், முதல்ராசேந்திர சோழன், முதல் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராசராச சோழன், நாயக்கர் கல்வெட்டுகள், அரசன் பெயர் தெரியாத கல்வெட்டுகள் போன்ற மன்னர்களின் கல்வெட்டுகளில் கோவிலுக்கு அல்லது மக்களுக்கு வழங்கிய பொன், பொருள், நிலம் மற்றும் குடமுழுக்கு பற்றிய செய்திகள் உள்ளன.
செப்பேடுகள் நாணயங்கள்
கிபி 8ஆம் நூற்றாண்டில் நெடுஞ்செழியன் பராந்தகனும், கிபி 19 ஆம் நூற்றாண்டில் பொன்மானத்தாண்ட மணமுடி மகாராசர் எனும் மன்னனும் ஆண்டதாக கொல்லிமலையில் கிடைத்த செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
கொல்லிமலை இலக்கிய பெருமைகள்
கொல்லிமலையின் பெருமையினை இலக்கிய புலவர்களான கபிலர், பரணர், இளங்கீரணார், அரிசில்கிழார், கல்லாடனார், பாலத்தனார், கழைதின்யானையார், வன்பரணார், குறுங்கோழியூர் கிழார், பெருங்குன்றூர் கிழார், தாயக்கண்ணணார், பெருஞ்சித்ரனார், மதுரை அளக்கர் ஞாழலார்,அவ்வையார் ஆகியயோர் வியந்து பாடியுள்ளனர்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என போற்றப்படும் பதினெண்மேற்கணக்கு நூல்களில் அதிகம் இடம் பெற்றுள்ளன.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் தங்கள் தேவாரப்பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து போன்ற சங்ககால இலக்கிய குறிப்புகள் உள்ளன. மேலும் கலித்தொகை, பரிபாடல் போன்ற நூல்களிலும் காணலாம்.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற சோழர்கால நூல்களிலும் நாயக்கர்கால குறவஞ்சி, அரபளீசுவரர் சதகம், அரவளீசுவரர் அந்தாதி, திருப்புகழ் போன்ற சிற்றிலக்கியங்களிலும் கொல்லிமலை சிறப்புகளைக் காணலாம்.
தற்கால புதினங்கள், வைகரை பூக்கள், நேசம், யுகா,ரஜினி பாடல் காட்சிகள் மற்றும் திரைப்படங்கள், கோலங்கள் போன்ற தொலைக்காட்சி தொடர்களும் இங்கு எடுக்கப்பட்டன.
கொல்லிமலையில் பார்க்க வேண்டிய இடங்கள் -Kollihills tourist places
கொல்லிமலை அருவிகள்
- மாசில்லா அருவி கொல்லிமலை
- ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, கொல்லிமலை
- நம்ம அருவி
கொல்லிமலையின் காட்சிமுனைகள்
- சீக்கு பாறை வியூ பாயிண்ட், கொல்லிமலை
- சோளக்காடு தொலைநோக்கி இல்லம்
கொல்லிமலை திருத்தலங்கள்
- அறப்பளீஸ்வரர் திருக்கோவில்
- மாசி பெரியசாமி கோவில்
- எட்டுக்கை காளியம்மன் கோவில்
- வாசலூர்பட்டி சிவன் கோவில்
- சமணர்கள் கோவில்
- சேரமுடையான் கோவில்/சோழமுடையான் கோவில்
- மெட்டாலா ஆஞ்சனேயர் கோவில்
- அருள்மிகு பழனியப்பர் முருகன் கோவில் பேளுக்குறிச்சி ராசிபுரம்
- புளியஞ்சோலை மாரியம்மன் கோவில்
- புளியஞ்சோலை பெரியண்ணசாமி கோவில்
கொல்லிமலையில் சுற்றுலா இடங்கள்
- வாசலூர்பட்டி படகு இல்லம் கொல்லிமலை
- அரசு தோட்டக்கலை பூங்கா
- முதுமக்கள் தாழி
- இளைஞர் விடுதி ரோஜா பூங்கா
- புளியஞ்சோலை
- பள்ளிப்பாறை
நாமக்கல் மாவட்டத்தில் பார்க்கவேண்டிய சுற்றுலாத்தலங்கள்
- அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குருசாமிபாளையம் இராசிபுரம்
- அருள்மிகு அழியா இலங்கையம்மன் திருக்கோயில் இராசிபுரம்
- அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் மோகனூர் நாமக்கல்
- அருள்மிகு பாலசுப்ரமணிய திருக்கோயில் மோகனூர் நாமக்கல்
- அருள்மிகு நாவலடி கருப்புசாமி திருக்கோயில் மோகனூர் நாமக்கல்
- அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில் மோகனூர் நாமக்கல்
- அருள்மிகு நித்யசுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் இராசிபுரம்
- அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் இராசிபுரம்
- ஜேடர்பாளையம் தடுப்பணை நாமக்கல்
- அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருச்செங்கோடு நாமக்கல்
- அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கபிலர்மலை நாமக்கல்
- அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் நாமக்கல்
- அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல்
- நாமக்கல் கோட்டை